மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை; ஒரு போலி வீடியோதான் காரணம்? – வெளியான அதிர்ச்சி தகவல்!
மணிப்பூரில் பழங்குடி பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டதற்கு போலியான ஒரு வீடியோவே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் மெய்தி இனத்தவருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே எழுந்துள்ள மோதல் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் பழங்குடி இன பெண்களை மெய்தி சமூகத்தினர் நிர்வாணமாக இழுத்து சென்று வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான மணிப்பூர் காவல்துறை இதுவரை 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோர சம்பவத்திற்கு போலியான ஒரு வீடியோவே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்னதாக சர்சந்த்பூரில் பழங்குடி இனத்தவர்கள் ஒரு பெண்ணை கொன்று பாலீதீன் கவரில் வைத்து சுற்றியதாக ஒரு வீடியோ பரப்பப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை கண்டு ஆத்திரமடைந்த மெய்தி சமூகத்தினர் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த கொடூரத்தை அரங்கேற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுபோல மணிப்பூர் உள்ளூர் செய்தித்தாள்கள் மற்றும் சில செய்தி சேனல்கள் போலியான தகவல்களை பரப்பி வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. போலி வீடியோ ஒன்றால் கலவரம் இன்னும் மோசமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K