1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (14:50 IST)

சிறுவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்

உத்தர பிரதேசத்தில் சிறுவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சக மாணவனை கடித்த சோனு யாதவ் என்கிற இரண்டாம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா அழைத்து கண்டித்துள்ளார். பிறகு சக மாணவனிடம் மன்னிப்பு கேட்குமாறு சோனுவிடம் அவர் கூறியுள்ளார்.
 
ஆனால் சோனு மன்னிப்பு கேட்காததால் ஆத்திர மடைந்த தலைமை ஆசிரியர் அச்சிறுவனை தரதரவென்று பள்ளி மேல் தளத்துக்கு இழுத்துச் சென்று,சிறுவனின் காலை பிடித்துக் கொண்டு அச்சிறுவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு, மன்னிப்பு கேட்குமாறு பயமுறுத்தியுள்ளார். இதில் சோனு அலறி அழத் தொடங்கியதால் சக மாணவர்கள் அங்குகூடினர். இதையடுத்து அச்சிறுவனை தலைமை ஆசிரியர் விடுவித்தார்.
 
இந்நிலையில் சோனுவை தலைமை ஆசிரியர் தலைகீழாக தொங்கவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா கைது செய்யப்பட்டார்.