கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள், போலீஸார் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் விக்ரம் கவுடா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு எல்லைகளை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வபோது மாவோயிஸ்டுகளை கேரள, ஆந்திர போலீஸார் சுட்டுப்பிடிக்கும் சம்பவங்களும் நடக்கிறது.
நேற்று கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கப்பினாலே வனபகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதாக கர்நாடகா போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து இரவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் நடுவே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் சில மாவோயிஸ்டுகள் சுடப்பட்டு இறந்தனர். அவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்களில் ஒருவனான விக்ரம் கவுடாவும் இறந்துள்ளதாக கர்நாடகா போலீஸார் உறுதி செய்துள்ளனர். கவுடாவின் குழுவில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களை கண்டறிய போலீஸார் முயன்று வருகின்றனர்.
விக்ரம் கவுடா கொலை செய்யபட்டதால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மேலும் குறையும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். 2005ம் ஆண்டில் மாவோயிஸ்ட் சாகேத் ராஜன் கொல்லப்பட்டதற்கு பிறகு நடந்த முக்கியமான என்கவுண்ட்டராக இது பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K