ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (12:37 IST)

நாட்டில் என்ன எமெர்ஜென்சியா நடக்கிறது? – லோக்சபாவை அதிரவைத்த டி.ஆர்.பாலு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் சட்டவரைவு 370ஐ நீக்கும் விவகாரத்தில் லோகசபாவில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை யூனியன் பிரதேசமாக மாற்றும் தீர்மானத்திற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கான சட்ட மசோதா லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

அதில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு “மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் சட்டத்தை மீறி செயல்படுகிறார். காஷ்மீர் தலைவர்கள் என்ன ஆனார்கள்? எதற்காக அவர்களை வீட்டு சிறையில் வைத்துள்ளீர்கள் என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

மேலும் அவர் “ உமர் அப்துல்லாவும், மெகபூபா முப்தியும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நாடாளுமன்றம் வர வேண்டிய பரூக் அப்துல்லாவும் வரவில்லை. அவர்கள் நிலைமை என்ன? நாட்டில் என்ன எமர்ஜென்சியா நடக்கிறது? ராணுவத்தை துணையாக வைத்து கொண்டு மத்திய அரசு ஒரு சட்டத்தை நீக்கி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியதை அவசரகதியில் நிறைவேற்றி உள்ளீர்கள். காஷ்மீரில் இதற்கு முறையான தேர்தலை நடத்தி மக்களின் கருத்தை கேட்ட பின்புதான் இது நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏன் அதை செய்யவில்லை?” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.