திருப்பதி லட்டின் இலவசமும் விலை உயர்வும்! பக்தர்கள் அதிருப்தி
திருப்பதி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஏழுமலையானை அடுத்து லட்டு தான். அந்த லட்டை பக்தர்களுக்கு இலவசமாக வழங்குவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துவிட்டு அதன்பின்னர் அதில் ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
திருப்பதியில் தற்போது இலவச தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இனி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் இலவசமாக 1 லட்டு வழங்கிவிட்டு அதன்பின்னர் ஒரு லட்டு 50 ரூபாய் என்ற விலையில் எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு இலவச லட்டை வாங்கிவிட்டு மேலும் மூன்று லட்டுகள் வாங்கினால் ரூ.150 செலுத்த வேண்டும். அப்போதுதான் பக்தர்கள் கையில் நான்கு லட்டு இருக்கும்.
ரூ.70 விலையில் நான்கு லட்டுக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இலவசம் என்ற பெயரில் ஒரு லட்டை கொடுத்துவிட்டு மீதி லட்டின் விலையை ரூ.50 என விலை ஏற்றியதற்கு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.