கழிவறையில் வீசிய சிகரெட்; தீப்பற்றி எரிந்த திருமலா எக்ஸ்பிரஸ்! – திருப்பதியில் அதிர்ச்சி!
திருப்பதி ரயில் நிலையத்தில் நின்ற திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டிணத்திலிருந்து திருப்பதிக்கு தினம்தோறும் திருமலா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 17488) இயக்கப்பட்டு வருகிறது. விசாகப்பட்டிணத்தில் முதல் நாள் மதியம் 2 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 5.20க்கு திருப்பதியை வந்தடைகிறது.
இன்று திருமலா எக்ஸ்பிரஸ் திருப்பதியை வந்தடைந்து நின்று கொண்டிருந்தபோது அதன் ஒரு பெட்டியிலிருந்து புகை வெளியேறியுள்ளது. இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ஊழியர்கள் தீயை அணைத்தனர்.
பயணி ஒருவர் ரயிலின் கழிவறையில் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் போட்டு சென்றதே தீ விபத்திற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிகரெட் பிடித்த பயணியை தேடி வருகின்றார்களாம். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.
Edit By Prasanth.K