செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2020 (10:39 IST)

நீங்க என்ன சொன்னாலும் செய்றோம்! – இந்திய அரசிடம் மன்றாடும் டிக்டாக்!

இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில் அரசிடம் இந்தியாவில் செயல்பட அனுமதி கேட்டு வருகிறது டிக்டாக்.

இந்தியா – சீனா ராணுவ துருப்புகள் இடையே லடாக் எல்லையில் நடந்த மோதலின் விளைவாக இரு நாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் டிக்டாக், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட பல செயலிகள் கூகிள் ப்ளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் பலரால் உபயோகிக்கப்படும் சீன அப்ளிகேஷனாக டிக்டாக் இருந்து வருகிறது. இந்நிலையில் டிக்டாக் தடை செய்யப்பட்டது வரவேற்பையும், அதிர்ச்சியையும் ஒரு சேர அளித்திருக்கிறது. இந்தியாவின் தகவல்கள் இதுபோன்ற சீன செயலிகளால் சீன அரசை சென்றடைவதை தவிர்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிக்டாக் இந்தியாவின் ட்விட்டர் பக்கம் டிக்டாக் தடை செய்யப்பட்டதற்கு தனது வருத்தங்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ”டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளின் பயன்பாட்டை இந்திய அரசு தடை செய்துள்ளது வருத்தம் அளிக்கிறது. எனினும் இந்திய அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க நாங்கள் தயாராக உள்ளோம். டிக்டாக் பயனாளர்களின் தகவல்கள் எதையும் எக்காரணம் கொண்டும் சீனா உள்ளிட்ட எந்த நாட்டிற்கு அளிக்க மாட்டோம் என்பதை உறுதி படுத்துகிறோம். நாங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்” என கூறியுள்ளது.