ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (17:14 IST)

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

Tiger
மகாராஷ்டிராவில் கடந்த 3 ஆண்டுகளில் 11 பேரைக் கொன்ற புலி கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். 
 
மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. வனப்பகுதி அருகே இருக்கும் கிராமங்களுக்குள்  அடிக்கடி புலிகள் புகுந்து மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. 

இதனிடையே சந்திரபூர் மாவட்டத்தில் சிச்பள்ளி வனப்பகுதியில் உலவி வந்த பெண் புலி கடந்த 3 ஆண்டுகளில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 11-பேரை கொன்றுள்ளது. 
 
இதையடுத்து மக்கள் மிகுந்த அச்சத்தில் வசித்து வந்தனர்.  இந்நிலையில், டி 83 என்று அழைக்கப்படும் அந்தப் பெண் புலி,  ஜனலா எனும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்ததாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பட்டது.
 
இதையடுத்து மயக்க மருந்து செலுத்தி புலியை பிடித்த வனத்துறை அதிகாரிகள், பின்னர் அதனை கூண்டில் அடைத்தனர்.  கால்நடை மருத்துவர்கள் மற்றும் பல அதிகாரிகளும் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

 
முன்னதாக பலமுறை கூண்டுகள் வைத்து பிடிக்க முயற்சி செய்தும் தப்பித்துவந்த இந்தப் புலி 3 ஆண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டிருப்பது மிகவும் நிம்மதியாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.