திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (13:42 IST)

எதையும் இடிக்காம, கட்டாம அடிக்கல் நாட்டலாம்! – உச்சநீதிமன்றம் அனுமதி

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ள நிலையில் எதையும் இடிக்காமல் அடிக்கல் நட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக நவீன வசதிகள் கொண்ட புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு மத்திய விஸ்டா திட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் டெல்லியில் இவ்வளவு பெரிய கட்டிடம் கட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறுதல் மற்றும் நடப்பு நாடாளுமன்ற கட்டிடம் தேசிய வரலாற்று சின்னங்களில் ஒன்றாக இருப்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான தீர்ப்புகள் இன்னமும் வெளியாகாத நிலையில் வரும் 10ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்ட உள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது உச்சநீதிமன்றத்திற்கு அதிருப்தியை அளித்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எதையும் கட்டவோ இடிக்கவோ அனுமதி இல்லை என நீதிபதிகள் தெரிவித்த நிலையில், அரசு சார்பில் “நீதிமன்ற உத்தரவுக்கு முன்னர் எந்த கட்டுமான பணியும், இடிக்கும் பணியும் மேற்கொள்ளப்படாது என்றும், அடிக்கல் நாட்டும் விழாவிற்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் ‘அடிக்கல் நாட்ட அளித்துள்ள அனுமதி கட்டிடம் கட்டுவதற்காக அளிக்கப்பட்ட அனுமதியாக பொருள்படாது’ என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.