எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை திருத்த சட்டம்; ”அரசமைப்புக்கு உட்பட்டது தான்”; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை திருத்த சட்டம் அரசமைப்புக்கு உட்பட்டது தான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது உச்ச நீதிமன்றம். அதன் படி வழக்கு பதிவு செய்யும் முன் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இதனை கடுமையாக எதிர்த்து நாடு முழுவதும் பல இயக்கங்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுமானால், அவர்களுக்கு முன் ஜாமீன் அளிக்கக்கூடாது எனவும், வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக விசாரணை தேவையில்லை எனவும் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து இத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ”எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதே” என தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.