1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (12:19 IST)

நான் சும்மா இருக்கப்போவதில்லை - பொங்கியெழுந்த டிஐஜி ரூபா

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவிடம், அக்ராஹார சிறையில் நடந்த விதிமீறல்கள் குறித்த சில முக்கிய ஆதரங்கள் இருப்பதாகவும், விரைவில் அவற்றை அவர் வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த  14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார். 
 
இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் அங்கு சென்று விசாரணையை தொடங்கவில்லை. அந்நிலையில், சிறையில் நடந்த விதிமிறல்கள் குறித்த ஆதரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ரூபா மீண்டும் புகார் கூறினார்.  மேலும், அவரையும், டிஜிபி சத்யநாராயணாவையும் வேறு பணிக்கு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு.
 
இந்நிலையில், ‘என்னை பணியிட மாற்றம் செய்ததால் நாம் சும்மா இருக்கப்போவதில்லை’ என கூறி வருகிறாராம் ரூபா. மேலும், தன்னிடம் உள்ள சில முக்கிய வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை பத்திரிக்கையாளர்கள்  மூலம் வெளியிடலாமா எனவும் யோசித்து வருகிறாராம். ஏனெனில், விசாரணைக்குழுவிடம் இந்த ஆதரங்களை கொடுப்பதால் எந்த பலனும் இல்லை என அவர் உறுதியாக நம்புகிறாராம். 
 
அதேபோல், ‘உங்களுக்கு எதற்கு வம்பு. அவர்கள் பணம் மற்றும் அதிகார பலம் படைத்தவர்கள். அவர்களிடம் ஏன் மோதுகிறீர்கள். உங்களுக்கு குடும்பம் உள்ளது. இந்த பிரச்சனையை விட்டு விடுங்கள்’ என நெருங்கிய சிலர் அறிவுரை கூற, “ இதற்கெல்லாம் பயந்தால் நான் காக்கி சட்டை போட்டுக்கொண்டு இருக்க முடியாது. என்னை பணியிட மாற்றம் செய்து விட்டதற்காக நான் ஒன்றும் பயப்படப்போவதில்லை” என பேசி வருகிறாராம்.
 
எனவே, டிஐஜி ரூபாவிடம் இருந்து எந்த நேரத்திலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.