இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் திடீர் ராஜினாமா!
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 6 மாத காலம் இருக்கின்ற நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது
மத்திய அரசு ரிசர்வ் வங்கியை சுயமாக இயங்கவிடுவதில்லை. அதன் முடிவுகளில் தலையிடுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் மிக மோசமான பொருளாதார சீரழிவை இந்தியா சந்திக்க நேரிடும் என கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா கூறியிருந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளது மத்திய அரசு நெருக்கடியால்தானா? என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கியில் இளம் வயதில் துணை கவர்னர் பொறுப்பை ஏற்றவர் விரால் ஆச்சார்யா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பொறுப்பேற்றார். இவருடைய பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 22 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜினாமாவிற்கு பின்னர் நியூயார்க்கில் உள்ள பிசினஸ் கல்லூரி ஒன்றுக்கு பேராசிரியராக அவர் பணிபுரியவுள்ளதாக கூறப்படுகிறது