ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசின் அனுமதி தேவையில்லை : தமிழக அரசு மனு
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் வழக்கில், தமிழக அரசு மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 25 வருடங்களாக சிறையில் வாடிவருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், இந்த வழக்கில் சிறையில் இருக்கும் கைதிகளின் விடுதலை குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. மேலும், சிபிஐ விசாரித்த வழக்குகளில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக 2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு இருக்கும் உரிமையை கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ராஜீவ்காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாமே தவிர, அதன் அனுமதியை பெறத்தேவையில்லை.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.