உணவு பரிமாறிய தலித் சிறுமிகள்; தட்டை வீசிய மாணவர்கள்! – ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!
ராஜஸ்தானில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலித் சிறுமிகள் உணவு பரிமாறியதால் உணவை மாணவர்கள் வீசியெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரோடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மதிய உணவு சமைப்பவராக லாலா ராம் குர்ஜார் என்பவர் இருந்துள்ளார்.
பொதுவாக மதிய நேரங்களில் மாணவர்களுக்கு லாலா ராம் குர்ஜார் தான் சொல்லும் மாணவர்களை வைத்து உணவு பரிமாறுவது வழக்கமாக இருந்திருக்கிறது. பொதுவாக உயர்சாதி மாணவர்களையே அவர் உணவு பறிமாற அழைப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் இரண்டு தலித் சிறுமிகளை உணவு பரிமாற சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லாலா ராம் அந்த உணவை தூக்கி வீசுமாறு மாணவர்களிடம் சொல்ல, அவர்களும் அப்படியே தூக்கி வீசியுள்ளனர்.
இதுகுறித்து தலித் சிறுமிகள் தங்கள் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் மாணவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டியதற்காக லாலா ராம் குர்ஜாரை கைது செய்துள்ளனர்.