இலவச பஸ்னு சொல்லிட்டு 36 லட்சம் வசூல்! – காங்கிரஸை கழுவி ஊற்றிய பாஜக!
உத்தர பிரதேசத்தில் தொழிலாளர்களுக்கு இலவச பேருந்து அனுப்புவதாக சொல்லிய காங்கிரஸ் ராஜஸ்தானிலிருந்து மாணவர்களை அனுப்பியதற்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெவ்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் நடை பயணமாகவே சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் தொழிலாளிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரம் பேருந்துகளை இலவசமாக இயக்குவதாக காங்கிரஸ் அனுமதி கேட்டிருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் அரசு தனது மாநிலத்தில் படித்து வந்த 12 ஆயிரம் உத்தர பிரதேச மாணவர்களை சிறப்பு பேருந்துகள் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதற்கு எரிபொருள் கட்டணமாக 19 லட்ச ரூபாய் உ.பி அரசு அளிக்க வேண்டும் என ராஜஸ்தான் கேட்டிருந்தது. உ.பி அரசும் காசோலையாக அந்த தொகையை செலுத்தியுள்ளது. அதற்கு பிறகு மீண்டும் 36 லட்ச ரூபாய் ராஜஸ்தான் அரசு கேட்டுள்ளது. அதையும் உ.பி அரசு செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உ.பி பாஜக பொதுச்செயலாளர் விஜய் பகதூர் பேச்யபோது “ஆயிரம் பஸ்களை அனுப்பி மக்களுக்கு சேவை செய்வதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸின் உண்மை முகம் ராஜஸ்தான் மூலமாக வெளிபட்டு விட்டது. அத்துடன் ஆயிரம் பஸ்களை இயக்குவதாக ஆட்டோ, மினி லாரி வண்டி எண்களை அளித்தது ஏன் என பிரியங்கா காந்தி பதில் சொல்ல வேண்டும் “ என கூறியுள்ளார்.
காங்கிரஸின் இந்த செயல்பாடு குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனங்கள் தேரிவித்துள்ளார்.