1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:40 IST)

புல்வாமாத் தாக்குதல் – கம்பீர், சேவாக், கோஹ்லி கண்டனம் !

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்துள்ள ராணுவ வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

காஷ்மீரில் இன்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  படுகாயமடைந்துள்ள 38 ராணுவ வீரர்கள் பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவர் 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

நாடே ஸ்தம்பித்துப் போயிருக்கும் இந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து அரசியல் தலைவர்களும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலரும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கவுதம் கம்பீர்
பிரிவினைவாதிகளுடன் பேசுவோம், பாகிஸ்தானுடனும் பேசலாம். ஆனால் பேச்சுவார்த்தை என்பது மேசையைச் சுற்றி இருக்கக் கூடாது. போர்க்களத்தில்தான் இருக்கவேண்டும். இதுவரை பொறுத்தது போதும். ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
விரேந்திர சேவாக்
ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் மிகுந்த வேதனையை அளிக்கிறது. அந்த வலியை, வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
விராட் கோலி
புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்துக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலியையும், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.