விவசாயிகள் குறித்து கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து: ராகுல் காந்தி கண்டனம்
விவசாயிகள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எம்பி மற்றும் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் ராகுல் காந்தி அவருக்கு கண்டனம் தெரிவித்தார் .
புதிய வேளாண்மை சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் அந்த போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல்கள், கொலை நடந்தது என்று சமீபத்தில் கங்கனா ரனாவத் பேசியிருந்தார். அதனால் தான் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது என்றும் இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்க முடியாது என்றும் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க பிரதமர் மோடி வலுவான நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப், வங்கதேசமாக மாறி இருக்கும் என்றும் கூறினார்.
விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து நாடு அறியாது என்றும் அந்த சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட பிறகும் போராட்டம் நடந்ததற்கு வெளிநாட்டு சதிதான் காரணம் என்றும் அவர் பேசியிருந்தார்.
கங்கனா ரனாவத்தின் இந்த கருத்துக்கு ஏற்கனவே பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அவமதித்து வருகிறது என்றும் விவசாயிகள் போராட்டத்தில் 800 விவசாயிகள் தியாகம் செய்தார்கள் என்றும் அந்நிய நாட்டு சதி என்று பாஜக எம் பி கங்கனா ரனாவத் கூறுவது விவசாயிகளுக்கு எதிரான அரசு என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது என்றும் தெரிவித்தார்
விவசாயிகளுக்கு எதிராக இது போன்ற கீழ்த்தரமான கருத்துக்கள் கூறுவது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் கங்கனா ரனாவத் பேச்சு இதை தான் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran