ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (13:43 IST)

குற்றம் சாட்டிய ராகுல்; கொதித்தெழுந்த மூத்த தலைவர்கள்! – காங்கிரஸில் விரிசல்??

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு பாஜகவுடன் கூட்டு இருப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியதை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி வெளியேறிய நிலையில் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸுக்கான தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து இன்று டெல்லியில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவையென மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சோனியா காந்திக்கு கடிதம் அளித்துள்ளனர். அதை ஏற்று இனி காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிக்க முடியாது என சோனியா காந்தி அறிவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பேசிய ராகுல்காந்தி காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களுக்கு பாஜகவுடன் தொடர்புள்ளது என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் ராகுல் காந்தி இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

ராகுல்காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கபில் சிபல் ”30 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறேன். பாஜகவுடன் நான் தொடர்பில் இருப்பதாக ராகுல் காந்தி நிரூபித்தால் கட்சியை விட்டு விலக தயார்” என கூறியுள்ளார். காங்கிரஸுக்குள்ளேயே ஏற்பட்டுள்ள இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.