மோடியும், நிதீஷ் குமாரும் பீகாரை கொள்ளையடித்தனர்! – ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம்!
பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28 தொடங்கி மூன்று கட்டமாக நவம்பர் 7 வரை நடைபெறும் நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் நிதிஷ் குமாரின் ஜனதா தள் மற்றும் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்துள்ள நிலையில் லலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில் பீகாரில் 2 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் மூன்றாவது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக பீகார் சென்ற ராகுல் காந்தி “பீகாரில் 7 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்தார். ஆனால் இப்போது 7 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு விட்டதா? நாடு முழுவதும் உற்பத்தி ஆகும் மக்கா சோளத்தில் 20 சதவீதம் பீகாரில் இருந்து உற்பத்தியாகிறது. ஆனால் விவசாயிகளுக்கு மக்கா சோளத்திற்கு உரிய விலை கிடைப்பதில்லை. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாய மசோதாவை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்து வருகிறது. பிரதமர் மோடியும், நிதிஷ்குமாரும் சேர்ந்து பீகாரை கொள்ளையடிக்கின்றனர். அவர்களுக்கு இளைஞர்கள் இந்த தேர்தலில் தக்க பாடத்தை புகட்ட வேண்டும்” என பேசியுள்ளார்.