லூதியானா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு - இருவர் பலி, பலர் காயம்!
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் இன்று குண்டு வெடித்தது.
ஆம், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து லூதியான காவல்துறை ஆணையர் தெரிவித்திருப்பதாவது, லூதியானா நீதிமன்றத்தின் 2வது தளத்தில் ஆவண அறைக்கு அருகே குண்டு வெடித்துள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, தடய அறிவியல் பிரிவினர் சண்டிகரில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர் யாரும் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேச விரோத சக்திகள் இதை செய்துள்ளனர். அரசு கவனமாக உள்ளது. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்திற்கு செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.