முதலமைச்சராக நயிப் சிங் சைனி நியமனத்திற்கு எதிராக பொதுநல வழக்கு
ஹரியானாவில் புதிய முதலமைச்சராக நயிப் சிங் சைனி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் -ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. எனினும், கூட்டணியில் அங்கம் வகித்த ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது.
ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் துணை முதலமைச்சராக உள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தொகுதி பகிர்வில் உடன்பாடு ஏற்படாத சூழலில், இந்த மோதல் முற்றியது.
இதனால், அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, அவரது அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். எனவே அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.
இதை அடுத்து ஹரியானாவின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க.வை சேர்ந்த நயாப் சிங் சைனி நேற்று பதவியேற்று கொண்டார். இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஹரியானாவில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்ததால் ஹரியானா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹரியானாவில் புதிய முதலமைச்சராக நயிப் சிங் சைனி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் -ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சைனி, தனது பதவியை ராஜினாமா செய்யாமல், முதலமைச்சராகப் பதவியேற்று, ரகசியம் காப்புப்பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதி நிதித்துவ சட்டத்தை மீறும் செயல் என குற்றம்சாட்டி அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
இந்த விவகாரம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.