1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (20:08 IST)

நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி: அரசியலில் திடீர் பரபரப்பு!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இத்தனை நாட்களாக கவர்னர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2015 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பாஜக 25 இடங்களையும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.
 
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள் மெகபூபா முப்தி ஆட்சியை கைப்பற்றினார். 
 
அதற்கு பின்னர்தான் துவங்கியது சிக்கல். கூட்டணி கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கடந்த ஜூன் மாதம் பாஜக கூட்டணி உடைப்பதாக அறிவித்தது.
 
இதன் பின்னர் சட்டசபை கலைக்கப்பட்டு அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கவர்னர் ஆட்சி இன்றுடன் நிறைவடைவதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்தது.
 
இந்த பரிந்துரையை ஏற்று இன்று நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அடுத்த ஆறு மாதத்திற்கு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.