திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (14:19 IST)

இது எனக்கு பெருத்த அவமானம்! – மன்னிப்பு கேட்ட பிரக்யா தாகூர்!

நாதுராம் கோட்சே பற்றி மக்களவையில் பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் பிரக்யா தாகூர்.

நேற்று முன்தினம் பாராளுமன்ற கூட்டத்தில் பாஜக எம்.பி பிரக்யா தாகூர் பேசும்போது நாதுராம் கோட்சேவை ’தேச பக்தர்’ என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பாராளுமன்ற பாதுகாப்பு ஆலோசனை குழுவிலிருந்து பிரக்யா தாகூர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்த பிரக்யா தாகூர் ”தேசத்திற்கு காந்தி அளித்த பங்களிப்பை நான் மதிக்கிறேன். எனது வார்த்தைகளுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இங்கே உள்ள உறுப்பினர் ஒருவர் எந்த ஆதாரமும் இல்லாமல் என்னை தீவிரவாதி என்றார். இது எனது கண்ணியத்தை குறைக்கும் செயல்” என கூறியுள்ளார்.

பிரக்யா தன்னை தீவிரவாதி என்று சொன்னது யார் என்று பெயரை சொல்லாதபோதும் அது ராகுல் காந்திதான் என கூறப்படுகிறது. பிரக்யா கோட்சே குறித்து பேசியதும் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி “தீவிரவாதி பிரக்யா தீவிரவாதி கோட்சேவை தேசபக்தர் என கூறுகிறார்” என குறிப்பிட்டிருந்தார்.