சேஷாசல மலையில் புதையல்; சாமியார் பேச்சை நம்பி ஏமாந்த கும்பல்!
திருப்பதியில் சாமியார் பேச்சை கேட்டு புதையலுக்காக மலை அடிவாரத்தை குடைந்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி மங்கலம் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி சந்தேகமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த மூன்று பேரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில் சேஷாசல மலை அடிவாரத்தில் புதையல் எடுப்பதற்காக பள்ளம் தோண்டி வருவது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது சேஷாசல மலை அடிவாரத்தில் புதையல் கிடைக்கும் என சாமியார் ஒருவர் சொன்னதாகவும், அதன்பேரில் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து அடிக்கடி ஆட்களை வரவழைத்து குழி தோண்டும் பணியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டு காலமாக நாடே ஊரடங்கில் கிடந்தபோதும் இவர்கள் இந்த குழி தோண்டும் பணியை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களை பிடித்த போலீஸிடமும் கிடைக்கும் புதையலில் பங்கு தருவதாகவும் தங்களை விட்டுவிடும்படியும் டீல் பேசியுள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.