வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2018 (13:20 IST)

பிதரமர் மோடி அவசர ஆலோசனை: உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குற்றச்சாட்டு எதிரொலி!

உச்ச நீதிமன்றத்தில் அசாதரண சூழல் நிலவுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் இன்று கூட்டாக ஊடகத்தை சந்தித்து குற்றச்சாட்டு வைத்தனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் இது முதல்முறையாகும். இதனையடுத்து பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 
இந்திய நீதிமன்ற வரலற்றில் இதுவரை நடந்திராத ஒரு சரித்திர சம்பவம் இன்று நடந்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
 
நான்கு நீதிபதிகள் அமர்வில் இருந்த மூத்த வழக்கறிஞரும் நீதிபதிகள் தேர்வுமுறையான கொலீஜியம் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தவருமான செல்லமேஸ்வர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவது எதுவும் சரியாக இல்லை. நீதிமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 
இதனை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஆனால் அது தோல்வியில் தான் முடிந்தது. சில மாதங்களுக்கு முன்னர் முக்கியமான ஒரு விவகாரத்தில் நான்கு நீதிபதிகள் கையெழுத்து போட்டு கடிதம் ஒன்றை தலைமை நீதிபதிக்கு அளித்தோம். ஆனால் அந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. நீதிபதிகளுக்கு வழக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் நிலவுகிறது.
 
உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை. உச்சநீதிமன்றத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. வேறு வழியில்லாமல் எங்கள் கவலைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலமைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். வேறு வழியில்லாமல் நாங்கள் ஊடகங்களை சந்தித்தோம் என அவர் கூறினார்.
 
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு பிரதமர் மோடியையும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி தற்போது மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.