1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (13:32 IST)

பாஜகவில் இணைய பேரம்..! இணையாவிட்டால் கைது..! டெல்லி அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Delhi Minister
பாஜகவில் இணைய வற்புறுத்தி தன்னிடம் பேரம் பேசப்படுவதாகவும், இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவேன் என்றும் டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
 
புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அதிஷி,  எனது நெருங்கிய உதவியாளர் ஒருவர் மூலம், எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், பாஜகவில் சேர வேண்டும் என்று அக்கட்சி என்னை அணுகியது என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் நான் பாஜகவில் சேரவில்லை என்றால், வரும் மாதத்தில், நான் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவேன் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது என்றும் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி ஆம் ஆத்மியை அச்சுறுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்றும் டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டி உள்ளார்,
 
அவர்களை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என்றும் நாங்கள் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீரர்கள், பகத்சிங்கின் உதவியாளர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அரவிந்த் கேஜ்ரிவாலின் தலைமையில் மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க பாடுபடுவோம் என்பதை பாஜகவுக்கு நான் கூற விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
நான் உட்பட ஆம் ஆத்மியின் மேலும் சில தலைவர்கள் குறிப்பாக, சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக், ராகவ் சதா உள்ளிட்டோர் தேர்தலுக்கு முன் கைது செய்யப்படலாம் என்று அமைச்சர் அதிஷி அச்சம் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருப்பதை பாஜக உணர்ந்துள்ளது என்ற அவர் கூறியுள்ளார்.  இதையடுத்தே, தற்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்தகட்ட தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர் என்று பாஜக மீது அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டி உள்ளார்.