கங்கையை சுத்தம் செய்ய உண்ணாவிரதம் இருந்தவர் உயிரிழப்பு: பெரும் பரபரப்பு
புனித நதியான கங்கை நதியை சுத்தம் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து கடந்த நான்கு மாதங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஜி.டி. அகா்வால் என்பவர் இன்று உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மரணம் அடைந்த ஜி.டி.அகா்வால் என்பவர் கான்பூரில் உள்ள தொழில்நுட்ப மையம் ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்தவா். இவா் கங்கை நதிநீா் ஆணையம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலா் பதவியில் இருந்ததால் அந்த நதியின் அசுத்தம் குறித்த விபரங்கள் அனைத்தையும் அறிந்தவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தன்னை முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக் கொண்ட ஜி.டி.அகா்வால், தனது பெயரை சுவாமி கியான் சுவரூப் சனாந்த் என்று மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கங்கையை தூய்மைப்படுத்த வேண்டும், அந்த நதியில் செயல்படுத்தப்படும் சுரங்கப்பணி மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் இருந்தார். சுமார் நான்கு மாத காலம் அவரது உண்ணாவிரதம் நீடித்த நிலையில் நேற்று அவரது உடல்நிலலஇ கவலைக்கிடமாக இருந்தது. எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜி.டி.அகா்வால், சிகிச்சையின் பலனின்றி இன்று மரணம் அடைந்தார். இவரது மறைவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.