செவ்வாய், 11 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 மார்ச் 2025 (09:40 IST)

முதலிரவில் மர்மமான முறையில் மரணம் அடைந்த புதுமண தம்பதி.. அதிர்ச்சி தகவல்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், திருமணம் நடந்த புதுமண தம்பதிகள் முதலிரவுக்கு சென்ற நிலையில், அவர்கள் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், கடந்த 7 ஆம் தேதி பிரதீப் மற்றும் ஷிவானி ஆகிய இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அதன் பின்னர், முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் புதுமண தம்பதிகள் எழுந்து வரவில்லை.

இதனால் உறவினர்கள் கதவை தட்டி எழுப்ப முயன்றனர். ஆனால், உள்ளிருந்து எந்த சத்தமும் வராததை காண, சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, புதுமண தம்பதிகள் இருவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தூக்கில் தொங்கியபடி இருந்த மணமகனையும், கட்டிலில் கழுத்தில் துணி மூடியிருந்த நிலையில் மணமகளையும் மீட்டு, உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மணமகள் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மணமகன், அதன் பின்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருவருமே விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில், முதலிரவிலேயே மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edited by Siva