புதுச்சேரியில் 2 மூட்டைகளில் கட்டு கட்டாக பணம்..! ரூ.4 கோடி பறிமுதல்...!! அதிகாரிகளுக்கு ஷாக்..!!
புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இரு வேறு இடங்களில் நான்கு கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளை தினம் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ரெட்டியார்பாளையம் பகுதி ஜான்சி நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் பதுங்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் துறைக்கு புகார் சென்றது.
இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் நாய்கள் கட்டப்படும் இடத்தில் 2 மூட்டைகள் இருப்பதை கண்டு அதனை திறந்து பார்த்தபோது கட்டு கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அதில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்ததால் வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வருவான வரித்துறை அதிகாரிகள் அங்கு வந்து சோதனை நடத்தியதில் ரூ.3 கோடியை 68 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணம் வைத்திருந்தது குறித்து விசாரணை மேற்கொண்டதில் நகரப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் முருகேசன் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து இது குறித்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோந்துங்கன், புதுச்சேரியில் இரு வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 4 கோடியே 9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.