1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 10 அக்டோபர் 2019 (18:44 IST)

இன்னும் எலுமிச்சைப் பழம் கட்டுகிறார்கள்! என்ன ஒரு காமெடி! – வைரலாகும் மோடியின் பழைய வீடியோ!

ரஃபேல் விமான சக்கரத்தில் எலுமிச்சை பழம் வைத்து அமைச்சர் ராஜ்நாத்சிங் பூஜை செய்தது ட்ரெண்டாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி எலுமிச்சை பழ கலாச்சாரத்தை கிண்டல் செய்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

இந்தியா – பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தப்படி 36 அதிநவீன ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவத்துக்காக பிரான்ஸில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆயுத பூஜையன்று அதில் முதல் விமானத்தை வாங்கி வருவதற்காக பிரான்ஸ் சென்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். அன்று ஆயுத பூஜை என்பதால் ரஃபேல் விமானத்திற்கு பூ, பொட்டு வைத்து, குங்குமத்தால் ஓம் என்று எழுதி, டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்தார் ராஜ்நாத் சிங்.

இது இணையத்தில் ட்ரெண்டானது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தேசத்துக்கான ஒரு பொருளுக்கு குறிப்பிட்ட மதம் சார்ந்த பூஜைகள் நடத்துவது தவறு என வாதிட்டன. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் மரபான வழக்கத்தை செய்ய கூடாது என்கிறீர்களா? என பதில் கேள்வி கேட்டார்.

இந்நிலையில் கடந்த 2017 கிறிஸ்துமஸ் அன்று எலுமிச்சை பழ கலாச்சாரத்தை மோடி கிண்டலடித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர் “காலம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஆனாலும் இன்னும் வாகனங்களில் எலுமிச்சை பழம், மிளகாய் ஆகியவற்றை கட்டி தொங்கவிடுகிறார்கள்” என்று கூறி சிரிக்கிறார்.

இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் எலுமிச்சை பழ விவகாரத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.