ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஹெல்மெட்: ரூ.180 கோடி ஒதுக்க முடிவு
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் காரணமாக இந்திய ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில், தீவிரவாதிகளை எதிர்த்து போரிடும் ராணுவ வீரர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் குண்டு துளைக்காத ஹெல்மெட் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக ரூ.180 கோடி செலவில் 1.60 லட்சம் ஹெல்மெட்கள் செய்யப்படவுள்ளதாகவும் அதற்காக உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எம்.கே.யூ. இன்டஸ்டிரீஸ் நிறுவனத்திடம் குண்டுத்துளைக்காத ஹெல்மெட் செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் உற்பத்தியாகும் ஹெல்மெட்டுக்கள் ஜெர்மனியில் தரப்பரிசோதனை செய்த பின்னரே ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் என தெரிகிறது. சண்டையின் போது ராணுவ வீரர்களுக்கு பெரும்பாலும் தலையில் தான் அதிகம் பாதிப்பு ஏற்படுவதால் இந்த ஹெல்மெட்டுக்களை தயாரிக்க அரசு முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.