பேச்சிலர் பார்ட்டிக்காக பால் கேனில் மதுபாட்டில் கடத்திய இளைஞர் கைது
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுவுக்கு அடிமையானவர்கள் நிலைமை படு மோசமாகி வருகிறது. நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மதுவுக்கு அடிமையானவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்பதும், மதுவுக்கு மாற்றாக வேறு சிலவற்றை குடித்து உயிரை இழந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டெல்லியில் பால் கேனுக்குள் மதுபான பாட்டில்களை கடத்திச் சென்ற நபர் ஒருவரை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டெல்லியை சேர்ந்த பாபி சவுத்ரி என்ற பால்காரர் தன்னுடைய உறவினர் ஒருவரின் திருமண பார்ட்டிக்காக மதுபாட்டில்களை பால் கேனுக்குள் கடத்தி சென்றுள்ளார். பால் அத்தியாவசியத் தேவை போலீசார் கண்டுகொள்ள மாட்டார்கள் என திட்டமிட்ட அவர் 7 பாட்டில்களை பால் கேனுக்குள் மறைத்து கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் நள்ளிரவில் பால் எப்படி வரும் என்று சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மறித்து அவரிடம் விசாரணை செய்ய முயன்றபோது திடீரென அவர் தப்பிக்க முயன்றார். உடனே பாபியை பாய்ந்து பிடித்த போலீசார் அவருடைய பால்கேனை சோதனை செய்தபோது அதில் 7 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு மது எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.