அறிகுறிகள் இல்லாமல் வரும் கொரோனா! – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!
இந்தியாவில் கொரோனா தொற்று உள்ள பலருக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளுமே தெரியாதது மருத்துவ நிபுணர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்திய அளவில் 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது ரேபிட் கிட போன்ற கருவிகள் கையிருப்பு உள்ளதால் கொரோனா பாதிப்புகள் வேகமாக கண்டறியப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் கொரோனா அறிகுறியாக சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இதுபோன்ற கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு கொரோனா பாதிப்பு உள்ளவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் சிலருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்புகளில் 80 சதவீதம் கொரோனா நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாமலே அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது என்பது பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் மேலும் சிரமங்களை ஏற்படுத்தும் என இந்திய மருத்துவ கவுன்சிலின் மூத்த விஞ்ஞானி கங்கா கேத்கர் தெரிவித்துள்ளார்.