கடனாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி ரூபாய் பரிசு!
கேரளாவில் காசு கொடுக்காமல் கடனாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
கேரளாவின் கோடை கால லாட்டரி குலுக்கல் நேற்று நடைபெற்றது. அதில் சந்திரன் என்பவரின் லாட்டரி சீட்டுக்கு 6 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த லாட்டரியை சந்திரன் காசு கொடுத்து வாங்கவில்லையாம். வழக்கமாக அவர் ஸ்மிஜா என்ற பெண்ணிடம் லாட்டரிகளை வாங்குவது வழக்கம். ஆனால் இம்முறை குலுக்கல் அன்று காலை வரை அவர் லாட்டரி வாங்காததால் ஸ்மிஜா அவருக்கு போன் செய்து லாட்டரி வேண்டுமா எனக் கேட்டுள்ளார்.
சந்திரனும் எனக்கு லாட்டரி எடுத்து வை. நான் பின்பு காசு கொடுக்கிறேன் என சொல்லியுள்ளார். உடனே ஸ்மிஜா அவருக்காக ஒரு லாட்டரியை எடுத்துக் வைத்து அதன் எண்ணை போட்டோ எடுத்து அவருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார். மதியக் குலுக்கலில் அந்த எண்ணுக்கு 6 கோடி ரூபாய் விழுந்துள்ளது. இதையடுத்து அவரிடம் அந்த லாட்டரி சீட்டைக் கொடுத்து பரிசு விழுந்ததை நேர்மையாக சொல்லியுள்ளார் ஸ்மிஜா.