வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (18:12 IST)

பொம்மை கல்யாணம் விளையாட்டு விளையாடுறோம்: 12 வயது சிறுமியை ஏமாற்றி மணந்த நபர்!

மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமியை பொம்மை கல்யாணம் விளையாட்டு விளையாடுகிறோம் என கூறி ஏமாற்றி ஒரு நபர் திருமணம் செய்துள்ளார்.
 
மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தை சேர்ந்த ராஸக் கான் என்ற நபர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு தனது மனைவியின் உறவினரான 12 வயது சிறுமியை மணக்க விருப்பம். இதனையடுத்து சிறுமியை மணக்க திட்டம் போட்ட ராஸக் கான் சிறுமி வசிக்கும் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளார்.
 
சிறுமியின் வீட்டுக்கு சென்ற அவர் தாய்வழி பாட்டி சிறுமியை பார்க்க விரும்புவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர் தனது தந்தை ரேயிஸ் ஷா, வழக்கறிஞராக இருக்கும் சகோதரர் அப்துல் மற்றும் ஹாபிஸ் ஜாஹித், அப்சர் அலி ஆகியோர் முன்னிலையில் சிறுமியை ராஸக் கான் திருமணம் செய்துள்ளார்.
 
தனக்கு என்ன நடக்கிறது என புரியாமல் கேட்ட சிறுமியிடம், ராஸக் கான் நாமெல்லாம் சேர்ந்து பொம்மை கல்யாணம் விளையாட்டு விளையாடுகிறோம் என பொய் கூறியுள்ளார். மேலும் சிறுமிக்கு 18 வயது ஆகிவிட்டது என பொய்யான திருமண சான்றிதழும் வாங்கி வைத்துள்ளார் அவர்.
 
இந்த திருமணம் குறித்து சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருக்க அவரை ராஸக் கான் இரண்டு மாதமாக வீட்டில் அடைத்து வைத்திருந்தார். பாட்டியை பார்க்க சென்ற மகள் திரும்ப வராததால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய் ராஸக் கானை தொடர்பு கொண்டு கேட்ட போது தான் சிறுமிக்கு திருமணமான சம்பவம் தெரியவந்துள்ளது.
 
இதனையடுத்து சிறுமியின் தாய் காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் அந்த சிறுமியை உடனடியாக மீட்ட போலீசார் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த ராஸக் கானை கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.