அம்மாவுக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைத்த மகன் – கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்
கேரளாவை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் தன் அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்த்து இரண்டாம் திருமணம் செய்து வைத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். இஞ்சீனியராக பணிபுரியும் கோகுல் சிபிஐ கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். சிறுவயதிலிருந்தே கோகுலை வளர்த்து கஷ்டப்பட்டு படிக்க வைத்தது எல்லாமே அவரது தாயார்தான். கோகுலின் தாயார் ஆசிரியராக பணிபுரிந்தவர். தற்போது கோகுல் படித்து முடித்துவிட்டு வேறொரு இடத்தில் பணியில் இருப்பதால் அவரது தாய் தனித்து விடப்பட்டவராய் இருந்தார். அம்மாவுக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கவில்லை இனிமேலாவது அவர் நிம்மதியாக வாழட்டும் என முடிவு செய்த கோகுல், தன் தாய்க்கு தானே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். அதை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஒரு பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் “அம்மாவின் முதல் திருமணம் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி தருவதாக இல்லை. ஒருநாள் தலையில் அடிப்பட்டு ரத்தம் வழிய அம்மா கிடந்தபோதும் என்னிடம் “உனக்காகதான் எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கேன்” என்று சொன்னார். நான் சின்ன வயதாய் இருக்கும்போதே எனது அப்பாவிடமிருந்து அம்மாவும், நானும் பிரிந்து வந்துவிட்டோம். அன்றிலிருந்து அம்மா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மொத்த வாழ்க்கையையும் எனக்காகவே வாழ்ந்து வந்திருக்கிறார்.
இப்போது நான் வளர்ந்துவிட்டேன். என்னால் அம்மாவை பார்த்து கொள்ள முடியும். எனவே அவருக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்தேன். இதுபற்றி கூறியபோது அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு அவரது நண்பர்களும் சேர்ந்து பேசியதில் கடைசியாக சம்மதம் தெரிவித்தார். மேலும் இந்த சமூகத்தில் ஒரு பெண் கணவன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்து கொள்வது குற்றமாக பார்க்கப்படுகிறது. அந்த எண்ணத்தை இது மாற்றும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
தன் தாய்க்கு மகனே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கும் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.