கேரள முதல்வருடன் இணைந்த திமுக எம்.பிக்கள்! – அரசியல் திருப்பு முனையா?
தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வரி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று நடத்தும் போராட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வரி பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக அம்மாநில எம்.பிக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சரியாக வரியை பகிராததாக மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா டெல்லியில் போராட்டம் நடத்தினார். அவரை தொடர்ந்து இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர். கேரள முதல்வரின் இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர் இன்று நடைபெறும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான போராட்டத்தில் கருஞ்சட்டை அணிந்து திமுக எம்.பிகளும் கலந்து கொள்வார்கள் என தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தென் மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டக் கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K