பறவைக் காய்ச்சல் எதிரொலி: கோழிகளை கொல்ல அரசு உத்தரவு!
கர்நாடகாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளதால் கோழிகளை கொல்ல அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகமெங்கும் கொரோனா ஒருபக்கம் பீதியை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் 125 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக பறவைக்காய்ச்சலும் ஆரம்பித்துள்ளதால் மாநில அரசுகள் பெரும் இடர்பாட்டை சந்தித்துள்ளன.
கடந்த வாரம் கேரளாவில் இரண்டு பேர் பறவைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து கேரள அரசு அங்குள்ள கோழி பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டது. தமிழக - கேரள எல்லையில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்படமால் இருக்க கிருமி நாசினிகள் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.
இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் பறவைக்காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பண்ணைகளிலும், வீட்டு வளர்ப்பு கோழிகளிலும் மேற்கொண்ட ஆய்வில் கோழிகளுக்கு பறவைக்காயச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கோழிகளை கொல்ல கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.