வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 மே 2018 (10:43 IST)

இன்னும் சற்று நேரத்தில் விசாரணை : எடியூரப்பா பதவி நீடிக்குமா?

கர்நாடகாவில் பாஜகவை சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

 
கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 112 எம்.எல்.ஏக்கள் கிடைக்காததால், யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என அரசியல் குழப்பநிலை நிலவி வந்தது. தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என பாஜகவும், 116 எம்.எல்.ஏக்கள் கொண்ட தங்கள் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ்-மஜத கட்சியும் கவர்னருக்கு கோரிக்கை விடுத்தன.
 
அந்நிலையில், ஆட்சி அமைக்க பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் எடியூரப்பாவுக்கு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்தார். மேலும் எடியூரப்பா தன்னுடைய மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசமும் கொடுத்துள்ளார்.
 
இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என காங்கிரஸும், மஜத கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 16ம் தேதி இரவு வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநர் முடிவில் தலையிட முடியாது எனவும், எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க முடியாது எனவும் கூறிவிட்டனர். அதோடு, இந்த வழக்கை  மே 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தன. அதன் படி இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த எடியூரப்பாவின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆளுநரிடம் எடியூரப்பா அளித்த கடிதத்தில் போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. அந்த கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். அவர் முதல்வராக நீடிப்பார்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
பாஜக பக்கம் 104 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். மேலும், 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். ஆட்சி அமைக்க 112 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்கிற நிலையில், காங்கிரஸ் அல்லது மஜத கட்சியிலிருந்து 8 எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்தால் மட்டுமே எடியூரப்பாவால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று நடைபெறும் வழக்கில், எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும் கால அவகாசம் 15 நாட்களிலிருந்து, சில நாட்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.