வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (11:10 IST)

8 வயது சிறுமி ஆசிஃபா பலாத்காரம் செய்து கொலை: கொந்தளிப்பில் காஷ்மீர்!

எட்டு வயது சிறுமி ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியே கொந்தளிப்பில் உள்ளது.

 
இமலயமலை மலையில் ஆடுகள், எருமைகள் மேய்க்கும் குஜ்ஜர் எனப்படும் முஸ்லிம் நாடோடி மேய்ப்பர் சமூகத்தைச் சேர்ந்தவர் புஜ்வாலா. ஜம்முவில் இருந்து 72 கிமீ தொலைவில் உள்ள கிராமத்தில் ஆசிஃபாவின் குடும்பம் வசிக்கிறது. ஆசிஃபா காணாமல் போன ஜனவரி 10 அன்று அவள் காட்டில் மேய்ந்துகொண்டிருந்த குதிரையை ஓட்டிவரச் சென்றதாக அவரது தாய் நினைவு கூர்கிறார். 
 
அன்று இரவு முழுக்க தேடியும், அவர்களால் ஆசிஃபாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு நாள்கள் கழித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள்களுக்குப் பிறகு ஆசிஃபாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவள் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். அவளது கால்கள் முறிக்கப்பட்டிருந்தன. நகங்கள் கருத்துப் போயுள்ளன. கையிலும், விரல்களிலும் நீலம் மற்றும் சிவப்பு நிறக் குறிகள் இருந்தன என்கிறார் ஆசிஃபாவின் தாய் நசீமா.
 
கோயில் ஒன்றில் பல நாள்கள் ஆசிஃபா கட்டிவைக்கப்பட்டதாகவும், மயக்க மருந்து தரப்பட்டதாகவும் புலன்விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். பல நாள்கள் ஆசிஃபா வன்புணர்வு செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு பிறகு கொல்லப்பட்டதாகவும், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டபின், தலையில் கல்லால் தாக்கப்பட்டிருக்கிறாள் ஆசிஃபா என்கிறது குற்றப்பத்திரிகை.
 
ஓர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, நான்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் வயது முதிராத ஒருவர் உள்ளிட்ட எட்டு ஆண்களை போலீசார் இந்த குற்றம் தொடர்பில் கைது செய்துள்ளனர்.
ஆனால், இந்தக் கைதுகளை எதிர்த்து ஜம்முவில் போராட்டங்கள் நடந்தன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
 
குஜ்ஜர் சமூகத்தை அச்சுறுத்தி ஜம்முவை விட்டு வெளியேற வைக்கவேண்டும் என்பது குற்றம்சாட்டப்பட்டவர்களின் நோக்கம் என்று விசாரணை அதிகாரிகள் நினைக்கின்றனர்.
 
பொது நிலங்களிலும், காடுகளிலும் குஜ்ஜர் சமூகத்தவர் தங்கள் கால்நடைகளை மேய்க்கின்றனர். இந்த நடவடிக்கையால் சமீப காலமாக இந்துக்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் மோதலும் ஏற்பட்டுள்ளது.