காணாமல் போன விக்ரம்லேண்டரை கண்டுபிடிக்க முடியுமா? இஸ்ரோ சிவன் விளக்கம்

Last Modified ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (08:06 IST)
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 சந்திரனை 2.1 கிமீ நெருங்கிய நிலையில் அதனிடம் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விக்ரம் லேண்டர் எங்கே இருக்கின்றது என்ற தகவல் தெரியவில்லை. இருப்பினும் காணாமல் போன விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரோ சிவன் மேலும் கூறியபோது, ‘சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆயுட்காலம் 7.5 ஆண்டுகள் உள்ளது. சந்திரயான் 2 ஆர்பிட்டரில் அதிக எரிபொருள் இருப்பதால் அது தாராளமாக 7.5 ஆண்டுகள் செயல்படும். மேலும் இதில் மிக நவீன கேமராவும் உள்ளது. இந்த கேமராவும் 7 ஆண்டுகள் வலம் வந்து நிலவு முழுவதையும் தெளிவாக படம் பிடித்து அனுப்பும் வல்லமை கொண்டது.

எனவே சந்திரனின் தரைக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் தொடர்பு துண்டிக்கப்பட்ட லேண்டர் விக்ரமை கண்டுபிடிக்க இந்த கேமிராவால் வாய்ப்பு உள்ளது. தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் முயற்சிப்போம். கேமிரா உதவியால் கண்டுபிடிக்கப்பட்டு அதனுடன் இணைப்பு கிடைத்தால் அதன் பின்னர் வழக்கமான ஆய்வுப் பணிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கப்படும்’ என்று கூறினார்

மேலும் சந்திரயான் 2 விண்கலத்தை பொருத்தவரை அது முழு தோல்வி அல்ல. கிட்டத்தட்ட 95 சதவிகித வெற்றி கிடைத்திருக்கிறது. 30 கிலோ மீட்டரில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை சென்றோம். கடைசி கட்டத்தில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டது. பிரதமரின் நம்பிக்கையான வார்த்தைகளால் எங்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது. இனி அடுத்த கட்ட ஏவுதல்களுக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது என்று இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :