வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (13:27 IST)

சந்திரயான் 2 வின் ”அந்த” கடைசி நிமிடங்கள்…

சந்திரயான் 2 விண்கலத்தின் கடைசி நிமிடங்கள் குறித்து ஒரு சிறிய பார்வை.

நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்த நிலையில் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திலிருந்து இஸ்ரோ மையம் ஸ்தம்பித்து போனது.

பின்பு பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் உரையாற்றினார். அப்போது ”நாடே உங்களோடு நிற்கிறது. இனி தான் நாம் புதிய சாதனைகளை படைக்கவிருக்கிறோம்” என ஆறுதல் கூறினார். மேலும் இதை தொடர்ந்து ராகுல் காந்தி, ஸ்டாலின் போன்றவர்கள் பாராட்டு கலந்த ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திரயான் 2 வில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் மெதுவாக தரையிறங்கும் தருணத்திற்காக நாடே காத்திருந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளும் பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டிலிருந்து அந்த தருணத்தை நோக்கி காத்திருந்தனர்.

அதிகாலை 1.30 மணிக்கு விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தரையிறங்கும் செயல்பாடு தொடங்கியது. நிலவில் வளிமண்டலம் இல்லை என்பதால் லேண்டரை மெதுவாக தரையிறக்க பாராசூட் பயன்படுத்த முடியாது. ஆதலால் எரிபொருளை பயன்படுத்தி சமநிலையில் தரையிறங்குவது தான் ஒரே வழி என முடிவு செய்யப்பட்டது. நிலவின் லேண்டரை நெறுங்க, கிடைமட்டமாக லேண்டர் நகர்ந்து கொண்டே இருக்கும். நிலவில் லேண்டர் தரையிறங்கும் தருணத்தில், ராக்கெட் இன்ஜின்களின் நகர்வை நிறுத்தி, அதே சமயம் இறக்கத்தின் வேகத்தையும் கட்டுபடுத்த முடியும். இதற்கு பெயர் “சாஃப்ட் லாண்டிங்” என அழைக்கப்படுகிறது. இதனை செயல்படுத்த எடுத்துக்கொள்ளப்படும் 15 நிமிடங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதன் படி அதிகாலை 1.48 மணிக்கு விண்கலம் தரையிறங்கும் வேகம் படிபடியாக குறைக்கப்பட்டது. இதன் பிறகு 1.58 மணியளவில் விண்களத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் பதற்றம் நிலவியது. பின்பு இதனை பார்த்து கொண்டிருந்த பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் சிவன் சென்று நிலவரத்தை கூறினார். பின்பு இஸ்ரோ தலைவர் சிவன், தழுதழுத்த குரலில் விக்ரம் லேண்டாரில் வந்து கொண்டிருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதை அங்கிருந்தவர்களுக்கு அறிவித்தார். பின்பு கட்டுப்பாட்டு மையமே ஸ்தம்பித்து போனது.

இதன் பின் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உரையாற்றினார். அப்போது தாய் நாட்டுக்காக வாழ்கின்ற இஸ்ரோ விஞ்ஞானிகளை பார்த்து நாடே பெருமை கொள்கிறது. நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கமின்றி உழைத்து வருகின்றனர். கடைசி வரை சந்திரயான் 2 வுக்காக உழைத்ததற்கு நன்றி” என தனது நன்றிகளை தெரிவித்தார்.

அதன் பின்பு, ”கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமல்ல, நமது விண்வெளி திட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளவேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியுள்ளீர்கள். இது வரை யாரும் முயற்சிக்காததை நீங்கள் முயற்சி செய்துள்ளீர்கள், நமது விண்வெளி திட்டத்தில் இனிதான் பல உச்சங்கள் வரவுள்ளன. நானும் நாடும் உங்களுடனே இருப்போம்” எனவும் ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி உரையாற்றியபோது விஞ்ஞானிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். உரையாற்றிய பின் சந்திரயான் 2 விற்காக உழைத்த ஒவ்வொரு விஞ்ஞானிகளுக்கும் ஆறுதல் கலந்த பாராட்டுகளை மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி உரையாற்றியபோது இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர். பிரதமர் மோடி உரையாற்றிவிட்டு திரும்பிய போது, இஸ்ரோ தலைவர் சிவன் மோடியிடம் கண்ணீர் விட்டு அழுதார். பிரதமர் மோடி சிவனை கட்டி தழுவி சிறுது நேரம் முதுகில் தடவி கொடுத்து ஆறுதல் கூறினார். இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கடைசி 15 நிமிடங்கள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுவது என்ன??

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கேட்டபோது, கடைசி 15 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை மிகவும் சாதாரணமாகவே இருந்தது. ஆனால் கடைசி மூன்று நிமிடங்கள் மிகவும் கடினமாகவே இருந்தன.என்று கூறுகின்றனர்.

மற்றொரு விஞ்ஞானி, லேண்டரிலிருந்து சிக்னல் வரவில்லை என்றாலும் ஆர்பிட்டரில் உள்ள கருவிகள் சிறப்பாகவே செயல்படுகின்றது. ஆதலால் 95% ஆராய்ச்சி பணிகள் ஆர்பிட்டர் மேற்கொள்ளும் என கூறுகின்றனர்.

மேலும் ரேடியோ கதிர்களை கொண்டு, லேண்டரின் இருப்பிடத்தை கண்டறியலாம். நிலவில் திட்டமிட்ட இடத்தில் தான் லாண்டர் இருக்கும் எனவுனம் விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவின் முயற்சியை குறித்து பல தலைவர்களும் பாராட்டி வரும் நிலையில், ”ஒவ்வொரு இந்தியருக்கும் இஸ்ரோவின் அர்ப்பணிப்பு உத்வேகத்தை கொடுக்கும்” என காங்கிர்ஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், பல கோடி மக்களை விண்வெளி நோக்கி பார்க்கவைத்த இஸ்ரோவிற்கு நன்றி. நாங்கள் இஸ்ரோவை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறோம் என கூறியுள்ளார்.
 

இந்த தருணத்தில் இந்திய மக்கள் அனைவரும் இஸ்ரோவின் இமாலய முயற்சிக்கு பாராட்டுகள் தெரிவிக்கவேண்டும் என பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.