விவசாயிகளை சுட்டுக் கொல்வது தான் ஜனநாயகமா..? ராகுல் காந்தி...!
வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை சுட்டுக் கொல்வது தான் ஜனநாயகமா என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஹரியானா மாநிலம் கானௌரி எல்லையில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தடுக்க முயன்ற போலீசார் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டால் அவர்களை சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள, இது தான் ஜனநாயகமா? என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னாள் ஆளுநர் உண்மையைச் சொன்னால், சிபிஐ வீட்டுக்கு அனுப்புகிறார்கள், இது தான் ஜனநாயகமா? எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குகிறார்கள், இது தான் ஜனநாயகமா? என்று சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரிவு 144, இணையத்தடை, கண்ணீர் புகை குண்டுகள் - இது தான் ஜனநாயகமா? ஊடகங்கள், மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு உண்மையின் ஒவ்வொரு குரலையும் ஒடுக்கிவிட்டார்கள் - இது தான் ஜனநாயகமா? மோடி அவர்களே, நீங்கள் ஜனநாயகத்தை கொன்றுவிட்டீர்கள் என்பது மக்களுக்கு தெரியும், மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.