1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (21:42 IST)

முதல்வர் பதவியை இழக்கிறாரா ஷிண்டே? அஜித் பவாரை பா.ஜ.க. சேர்த்ததன் பின்னணி என்ன?

தற்போதைய மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மஹா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அஜித் பவார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
 
மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி அமைத்து சிவ சேனையின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தார்.
 
உத்தவ் தாக்கரே அரசில் அஜித் பவார் துணை முதலமைச்சராக இருந்தார். இந்நிலையில் சிவ சேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியை வெளிப்படுத்தி வெளியேறினார்.
 
தற்போது ஏக்நாத் ஷிண்டே சிவ சேனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஒரு வருடத்தில் அஜித் பவார், ஷிண்டேவின் அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.
 
மஹா விகாஸ் அகாடி ஆட்சியில் அஜித் பவார் தனது எம்எல்ஏக்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் அநீதி இழைக்கிறார் என்று தெரிவித்திருந்தார் ஏக்நாத் ஷிண்டே.
 
“எங்கள் எம்எல்ஏக்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் நாங்கள் இந்த அரசிலிருந்து விலகுகிறோம்” என்று ஏக்நாத் ஷிண்டே அப்போது தெரிவித்திருந்தார்.
 
ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் அஜித் பவாருக்கு எதிராக இருந்தனர்.
 
ஆனால் தற்போது அதே அஜித் பவார்தான், ஷிண்டே – ஃபட்நாவிஸ் அரசில் இணைந்துள்ளார்.
 
ஒரு வருடத்திற்கு முன்பு ஏக்நாத் ஷிண்டே 40 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சிவ சேனையை விட்டு வெளியேறி பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தனர்.
 
சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவுடன் சிவ சேனையிலிருந்து பிரிந்து வந்த 16 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
 
அந்த தீர்ப்பில் சிவ சேனையின் 16 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகரே முடிவு எடுத்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதை உடனடியாக செய்ய வேண்டும் என சிவசேனை தெரிவித்திருந்தது ஆனால் ராகுல் நர்வேகரே தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளலாம் எந்த அவசரமும் இல்லை என பாஜக தெரிவித்திருந்தது.
 
ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்
 
ஷிண்டே தகுதிநீக்கம் செய்யப்படுவார் - சஞ்சய் ராவத்
 
முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதிநீக்கம் செய்யப்படுவர் என சிவ சேனையை சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
 
“அரசு இன்னும் ஒரு நிலையானத் தன்மையை பெறவில்லை. அதனால்தான் அவர்களுக்கு அஜித் பவாரின் உதவி தேவைப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
“ஏக்நாத் ஷிண்டே தகுதிநீக்கம் செய்யப்பட்டவுடன் மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர் கிடைப்பார். இது என்னுடைய கருத்து,” என்றும் தெரிவித்தார் சஞ்சய் ராவத்
 
“ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அது நடந்ததா? எனவே அந்த எம்எல்ஏக்கள் இதை கருத்தில் கொள்வர். மகாராஷ்டிர அரசியலில் புதியதோர் மாற்றம் வரும். அஜித் பவார் பாஜகவுடன் செல்வார் என ஷரத் பவாருக்கு தெரிந்திருக்கும்,” என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
 
கட்டபொம்மனை எட்டப்ப மன்னர் காட்டிக் கொடுத்தார் என்பது உண்மையா? நடந்தது என்ன?
 
ஏக்நாத் ஷிண்டே மற்றும் 15 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டே தேசியவாத காங்கிரஸின் சட்டமன்ற உறுபினர்களை ஆட்சியில் பாஜக சேர்த்திருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சந்தீப் ப்ரதான்.
 
இதுகுறித்து மேலும் பேசிய சந்தீப் ப்ரதான், “தகுதி நீக்கம் செய்யவில்லை என்றாலும் ஷிண்டே மூத்த தலைவர்களான தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் அஜித் பவாருக்கு இடையே சிக்கித் தவிப்பார்,” என்று கூறுகிறார்.
 
“மத்திய அரசாங்கத்திலும் ஃபட்நாவிஸுக்கு இடம் அளிக்கப்படும் என்ற பேச்சுகள் எழுந்தள்ளன. மத்தியில் ஃபட்நாவிஸ், மாநிலத்தில் ஷிண்டே – பவார் என புதிய இணை உருவாகும்," என பிரதான் தெரிவிக்கிறார்.
 
சமீபமாக வந்த தீர்ப்பு, ஷிண்டே, ஃபட்நாவிஸ், மற்றும் பவாரை ஒன்று சேர்த்திருந்தாலும் அவர்கள் அதிருப்தியுடந்தான் காணப்படுவர். அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. சிவ சேனா பிரிந்தது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகையில். பாஜக இன்னுமொரு கட்சியை அவ்வாறு பிரித்துள்ளது. இது முற்றிலும் நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது.” என்கிறார் சந்தீப் ப்ரதான்.
 
“பாஜக 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற விரும்புகிறது. ஆனால் ஏக்நாத் ஷிண்டேவால் அந்த வெற்றியை பெற்று தர முடியுமா என பாஜக அவநம்பிக்கையாக இருக்கிறது. அதனால்தான் தேசியவாத காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் கூட்டணியில் சேர்த்துள்ளனர். தேசியவாத காங்கிரஸில் வலுவான தலைவர்கள் உள்ளனர். அவர்களிடம் பணமும் உள்ளது. அதனால் அவர்களால் நாடாளுமன்ற தேர்தல் தொகுதியில் சீட் வாங்க முடியும். கர்நாடக, பிகார், மேற்கு வங்கத்தில் வெற்றியை தவறவிட்டதால் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையில் வெற்றிப் பெற பாஜக விரும்புகிறது.
 
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்தான முடிவு ராகுல் நர்வேகருக்கு ஒரு முக்கிய முடிவாகவுள்ளது. அடுத்து ஷிண்டே என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியும் எழும். ஏனென்றால் அவர் தீர்க்கமான முடிவுகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.” என்கிறார் சந்தீப் ப்ரதான்.
 
ஷிண்டேவுக்கு பாஜக வழங்கும் பதிலடியா?
 
மூத்த பத்திரிகையாளர் மிராளனி நனிவேடேகர், “அஜித் பவாரிடம் 40 எம்எல்ஏக்கள் இருந்தால் கட்சி அவருடையதாக இருக்கும்.
 
ஃபட்னாவிஸ், ஷிண்டே மற்றும் பவாருக்கு இடையே ஒத்துப் போக வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெறுவதே பாஜகவின் நோக்கம். சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு விளம்பரத்தில் ஏக்நாத் ஷிண்டேவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது ஆனால் பாஜக அதை விரும்பவில்லை.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை சேர்த்து பாஜக, ஷிண்டே தரப்பினருக்கு பதிலடி கொடுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுடன் கைக் கோர்ப்பதால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற முடியாது என பாஜக நம்புகிறது.” என்று தெரிவித்தார்.
 
அஜித் பவார் மற்றும் ஃபட்நாவிஸுக்கு மத்தியில் ஷிண்டேவின் அதிகாரம் வலுவிழக்கும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்
 
அதிகாரத்தை இழப்பார் ஷிண்டே?
 
“மத்திய அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் பாஜக 15 இடங்களில் வெல்லும் என கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது. தேசியவாத காங்கிரஸுடன் சேர்ந்தால் பாஜகவால் 10 இடங்களை பெற முடியும் ஆனால் பாஜக 12 இடங்களில் வெற்றிப் பெற விரும்புகிறது.
 
சமீபமாக நடைபெறும் விஷயங்களில் ஷிண்டேவுக்கு எந்த பங்கும் இல்லை என்று நான் நம்புகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற பாஜகவின் கனவு நாளுக்கு நாள் நலிந்து கொண்டே வருகிறது.
 
ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்தாலும் தேவேந்திர ஃபட்னாவிஸ்தான் அனைத்துவிதமான முடிவுகளையும் எடுக்கிறார். அவரே முதலமைச்சர் அலுவலகம் தொடர்பான முடிவுகளையும் எடுக்கிறார்.” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் விஜய் சோர்மாரே.
 
மேலும் அவர், “ப்ரிஜேஷ் சிங் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார். முதலமைச்சராகக் கூட ஷிண்டேவுக்கு பெரிதாக எந்த அதிகாரமும் இல்லை. தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் வந்தவுடன் அவர் மேலும் வலுவிழந்துவிடுவார். எம்எல்ஏக்களின் தகுதிநீக்கம் தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஷிண்டே தரப்புக்கு முடிவு பாதகமாக போனால் என்னவாகும் என்பதால் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கைக் கோர்த்துள்ளது.” என்கிறார் சோர்மாரே.
 
"உச்ச நீதிமன்றம் வகுத்த வழிமுறைகளை தாண்டி சட்டசபை சபாநாயகரால் செயல்பட முடியாது. தகுதி நீக்கம் என்ற கத்தி தலைக்கு மேல் தொங்குவதால் பாஜக ப்ளான் 'பி' தயார் செய்துள்ளது. பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஷிண்டே மற்றும் தேசியவாத தரப்பினரிடம் குறைந்த அளவிலான எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே பாஜக அவர்களை அழைக்கும்போது தாராளமாக அழைத்தாலும் உள்ளே வந்தவுடன் பாஜகவின் செயல்திட்டத்திற்கு ஏற்பதான் செயல்பட்டாக வேண்டும்." என்கிறார் விஜய் சோர்மாரே.