வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (14:56 IST)

அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காற்று – ராஜினாமா செய்கிறாரா ராகுல்?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று கூறப்படுகிறது.

15 வருடங்களாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி 2017ல் தான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றிலிருந்து கட்சியை வளர்த்தெடுக்க அவர் பல விதங்களில் பாடுப்பட்டாலும் பாஜகவை அவரால் அசைத்து கூட பார்க்க முடியவில்லை என்பதற்கு இந்த சட்டசபை தேர்தல் ஒரு உதாரணம் ஆகிவிட்டது. 2018ல் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் பாஜக 104 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருக்க காங்கிரஸிடம் 80 இடங்களே கைவசம் இருந்தன. வேறுவழியில்லாமல் 37 இடங்களே பெற்றிருந்த ஜனதா தல் குமாரசாமிக்கு ஆதரவளித்து அவரை முதலமைச்சர் ஆக அமர வைத்தார்கள். இதேபோல ஒவ்வொரு இடத்திலும் ராகுல் தான் அமரா விட்டாலும் பாஜக வந்துவிடக்கூடாது என்ற முனைப்பில் செயல்பட்டார். எனினும் காங்கிரஸுக்கு தேசிய அளவில் ஒரு பிரம்மாண்ட பிம்பத்தை உருவாக்க அவர் தவறிவிட்டார்.

காங்கிரஸின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வந்ததும் காங்கிரஸே அவரை ரொம்ப எதிர்பார்த்தது. இந்தியாவெங்கும் பிரிந்து கிடக்கும் காங்கிரஸ் பிரிவு கட்சிகளை ஒன்றிணைத்து அகில இந்திய காங்கிரஸுக்கு பலத்தை கொடுக்க ராகுல் எவ்வளவோ முயன்றார். பல பேருடன் பல இடங்களில் விட்டுகொடுத்து நடந்தார். ஆனால் நரேந்திர மோடி என்னும் மிகப்பெரிய தோற்றத்திற்கு முன்னால் அவர் செய்த அனைத்தும் பலனளிகாமல் போய்விட்டது.

நாளை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. தோல்விக்கு பிறகான இந்த கூட்டத்தில் தோல்விக்கான காரணம், அடுத்தக்கட்ட செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்படும். இதில் ராகுல் தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதை செயற்குழு ஏற்றுக்கொள்வது சந்தேகம்தான் என்றும் கூறுகிறார்கள். நாளை ஒருவேளை ராகுலின் ராஜினாமாவை செயற்குழு ஏற்றுகொள்ளாமல் அவரை தலைவர் பதவியில் நீடிக்க சொன்னால் ராகுலின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.