ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (23:12 IST)

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் - பலர் படுகாயம் - என்ன நடந்தது?

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்த மோதல் நடந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புக்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய இராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி விட்டதாக இந்திய ராணுவம் கூறுகிறது.
 
இந்த மோதலுக்குப் பிறகு பரஸ்பரம் அமைதியை நிலைநாட்ட அப்பகுதியின் தளபதி சீனாவில் உள்ள எல்லை கட்டளை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
 
அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்களை விட சீன ராணுவ வீரர்கள் அதிக அளவில் காயம் அடைந்ததாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் முக்கிய ஆங்கில நாளிதழான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
 
மோதி அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
 
இந்த விவகாரம் தொடர்பான தகவல் வெளியே வரத் தொடங்கிய பிறகு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசை இலக்கு வைத்து காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது.
 
எல்லையில் நடக்கும் இதுபோன்ற செயலை பொறுத்துக் கொள்ள முடியாது என்று சீனாவிடம் மத்திய அரசு கடுமையான தொனியில் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இடுகையை பதிவிட்டிருக்கிறது.
 
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இந்த மோதல் குறித்த தகவல்களை இத்தனை நாட்களாக அரசு மறைத்தது ஏன் என அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஒவைசி மத்தியில் ஆளும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் இருந்து வெளியாகும் செய்தி கவலை அளிக்கிறது.
 
இந்தியா, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு, பல நாட்கள் நாட்டையே இருளில் மூழ்கடித்த அரசு, குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றத்தில் இது குறித்து உரிய தகவலை தெரிவிக்காதது ஏன்? என்று அவர் தமது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த மோதலுக்கு என்ன காரணம்? துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா அல்லது கல்வான் போல இருந்ததா? இந்திய வீரர்களின் நிலை என்ன? எத்தனை வீரர்கள் காயமடைந்தனர்? சீனாவுக்கு வலுவான செய்தியை தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றம் ஏன் தனது வீரர்களுக்கு இந்த நேரத்தில் தனது ஆதரவைத் தெரிவிக்கக் கூடாது?" என்று ஒவைசி கூறியுள்ளார்.
 
 
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
 
மேலும் ஒவைஸி தமது ட்வீட்டில், "எந்த நேரத்திலும் சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. ஆனால் மோதியின் பலவீனமான தலைமைதான், சீனா முன் இந்தியா அவமானப்படுவதற்கு காரணம். நாடாளுமன்றத்தில் அவசரமாக இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஏதுவாக, நாளை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுப்பதாகவும் ஒவைஸி தெரிவித்துள்ளார்.
 
2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கல்வானில் சீன ராணுவ வீரர்களும் அதிக அளவில் கொல்லப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது. ஆனால் நான்கு ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்ததாக சீனா உறுதி செய்தது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலிய நாளிதழான 'தி கிளாக்சன்' தனது புலனாய்வு செய்தியில் கல்வானில் நான்கு சீன வீரர்கள் அல்ல, சீனாவுக்கு அதை விட பல மடங்கு இழப்பாக குறைந்தது 38 வீரர்கள் வரை இறந்ததாகக் கூறியிருந்தது. கல்வான் மோதலில் பங்கேற்ற ஒரு தளபதி இந்த ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் விருந்தினராக சீனாவால் அழைக்கப்பட்டிருந்தார். 2020ஆம் ஆண்டில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான சூழ்நிலை நிலவி வந்தது. அந்த ஆண்டு மே 1ஆம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் வடக்குக் கரையில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் டஜன் கணக்கான வீரர்கள் காயமடைந்தனர்.
 
இதையடுத்து, ஜூன் 15ஆம் தேதி கால்வன் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஜூன் 16ஆம் தேதி இந்த மோதல் குறித்து இந்திய ராணுவத்தின் செய்திக்குறிப்பு ஒன்று வெளியானது. அதில், "மோதல் நடந்த இடத்தில் பணியில் இருந்த 17 ராணுவ வீரர்கள் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர். பிறகு இந்த மோதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது என்று ராணுவம் தெரிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு சீனாவும் ஒரு அறிக்கையை பல மாதங்களுக்குப் பிறகு வெளியிட்டது, ஆனால் அதில் தமது தரப்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெளிவாக இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இறந்த தனது நான்கு வீரர்களுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதக்கங்களை சீனா அறிவித்தது. அப்போதுதான் அந்நாட்டின் உயிரிழப்பு புள்ளிவிவரமும் வெளி உலகுக்குத் தெரிய வந்தது.