திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2016 (17:34 IST)

ரயில் பயணியின் ஒரே டுவிட்... லஞ்சம் வாங்கிய டிக்கெட் பரிசோதகர் வேலை அவுட்...

முன்பதிவு செய்யாத பயணிகளிடம் லஞ்சம் வாங்கிகொண்டு ரெயிலில் இருக்கைக்கு ஏற்பாடு செய்துதந்த டிக்கெட் பரிசோதகரை கூறித்து டுவிட் செய்த பயணி, அடுத்த ஸ்டேஷன் வந்து சேர்வதற்குள் டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.


 
 
ராஜஸ்தான் மாநிலத்தில், பார்மர் நகரில் இருந்து அரியானா மாநிலத்தில் உள்ள கல்கா நகருக்கு செல்லும் பார்மர்-கல்கா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஏறிய ஒரு டிக்கெட் பரிசோதகர் அங்கு இருந்த அனைவரிடமும் இருக்கை வசதிக்காக தலா 15 ரூபாய் வசூலித்து கொண்டிருந்தார். 
 
இதை தட்டிக்கேட்க யாரும் முன்வராத நிலையில் கோவிந்த் நாராயண் என்ற பயணி மட்டும் துணிச்சலாக அந்த டிக்கெட் பரிசோதகரை எதிர்த்து கேள்வி கேட்டார். வாங்கும் பணத்துக்கு உரிய ரசீது தரும்படியும் வலியுறுத்தினார்.
 
பிக்கானர் நகர்வரை நானும் இதே பெட்டியில் தான் வரப் போகிறேன். எல்லோருக்குமாக சேர்த்து அப்புறமாக ஒரே ரசீதாக போட்டுத் தருகிறேன் என அந்த டிக்கெட் பரிசோதகர் வாயடித்தார்.
 
இதனை கோவிந்த் நாராயண், உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் டிக்கெட் பரிசோதகரை குறித்து ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜோத்பூர் வட்டார ரெயில்வேத்துறை மேலாளர் ஆகியோருக்கு டுவீட் செய்தார்.
 
ட்வீட் செய்த அடுத்த சில நிமிடங்களில் உங்களது புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ரெயில்வே அமைச்சகத்தில் இருந்து அவருக்கு பதில் வந்தது. அதைதொடர்ந்து, அவரது கைபேசியை தொடர்பு கொண்டு பேசிய ரெயில்வே உயரதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத் துறையினரை உடனடியாக அனுப்பி வைத்தனர்.
 
ஜோத்பூர் நகரில் அந்த ரெயில் பெட்டியில் ஏறிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அந்த டிக்கெட் பரிசோதகரிடம் இருந்த ரசீது புத்தகங்கள் மற்றும் கைவசம் இருந்த பணம் ஆகியவற்றை சோதனையிட்டு பார்த்தபோது, அவர் சிக்கிக் கொண்டார்.
 
இந்த சோதனையின் விபரங்கள் உடனடியாக டுவிட்டர் மூலம் ஜோத்பூர் வட்டார ரெயில்வேத்துறை மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டது. ஷியாம்பால் என்ற அந்த டிக்கெட் பரிசோதகரை உடனடியாக இடைக்கால பணிநீக்கம் செய்யும்படி அவர் டுவிட்டர் மூலமாக உத்தரவிட்டார். இதையடுத்து, பணியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.