புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (19:32 IST)

நமது ஏவுகணை நம்மையே தாக்கிவிட்டது! – விமானப்படை அதிகாரி அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் விமானப்படையுடன் நடந்த சண்டையின்போது தவறுதலாக நமது விமானத்தை நமது ஏவுகணையே தாக்கிவிட்டது என விமானப்படை தளபதி பக்தாரியா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் விமானப்படைக்கும், இந்தியாவுக்கும் இடையே நடந்த சண்டையில் பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது.

இந்த தாக்குதலின் போது எம்.ஐ 17 ரக இந்தியா ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஏவுகணையால் தாக்கி அழிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 7 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். தாக்கிய ஏவுகணை பாகிஸ்தானுடையதா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வந்த நிலையில், விமானப்படை தளபதி பக்தாரியா “ஹெலிகாப்டரை தாக்கியது இந்திய ஏவுகணைதான்” என்று திடுக்கிடும் பதிலை கூறியுள்ளார்.

பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்து தளத்திற்கு தொடர்பு கிடைக்காததால், எதிர் நாட்டினுடையது என நினைத்து ஏவுகணை கொண்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. நமது நாட்டு வீரர்களை நமது ஏவுகணையே தவறுதலாக தாக்கி அழித்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் இந்திய இராணுவம் கட்டமைக்கப்படும் என பக்தாரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.