ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!
சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் ஐஐஐடியில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், தனது வகுப்பு தோழிகளின் படங்களை செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் ஆபாச படங்களாக உருமாற்றிய புகாரில் நீக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 6-ஆம் தேதி சில மாணவிகள் அளித்த புகாரை தொடர்ந்து, நிர்வாகம் உடனடியாக ஒரு குழுவை அமைத்தது. அக்குழு, குற்றம் சாட்டப்பட்ட மாணவரின் மடிக்கணினி, மொபைல் போன் உள்ளிட்ட சாதனைகளை பறிமுதல் செய்தது. அவற்றில் ஆட்சேபனைக்குரிய ஏஐ படங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அந்த மாணவர் ஐஐஐடியில் இருந்தும் விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு, அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.
ஐஐஐடி பதிவாளர் ஸ்ரீனிவாஸ் இதனை உறுதிப்படுத்தியதுடன், மறுநாள் மாலை காவல்துறையில் முறையான புகார் அளிக்கப்பட்டு, டிஜிட்டல் ஆதாரங்கள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாணவரை காவலில் எடுக்க காவல்துறை குழு பிலாஸ்பூருக்கு செல்லும் என்று கூடுதல் கண்காணிப்பாளர் விவேக் சுக்லா தெரிவித்துள்ளார்.
Edited by Siva