திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (16:29 IST)

நான் சாப்பிட்ட ஜிலேபி தான் பிரச்சனையா...? காம்பீர் காட்டம்!

நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் டெல்லி காற்று மாசு குறைந்து விடுமா? என கவுதம் காம்பீர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். 
 
பாஜவில் இணைந்த கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கடந்த மக்களவை தேர்தலின் போது டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  
 
இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் உள்ள காற்று மாசு நெருக்கடி குறித்து விவாதிக்க உயர்மட்ட நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு காம்பீரும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வர்ணணையாளராக இருப்பதால் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை. 
 
இதுமட்டுமல்லாமல் அங்கு தனது நண்பர்களுடன் ஜிலேபி சாப்பிட்டு கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டது.  
 
இதனைத்தொடர்ந்து இப்போது டெல்லி ஐஓடி பகுதியில், காம்பீரை கானவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், இவரை காணவில்லை, யாரேனும் பார்த்தீர்களா? கடைசியாக இவரை பார்த்தது, இந்தூரில் ஜிலேபி உண்ட போது என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 
 
தற்போது தன் மீது விழுந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் காட்டமாக பதில் அளித்துள்ளார் காம்பீர். காம்பீர் கூறியதாவது, நான் ஜிலேபி சாப்பிட்டதால் டெல்லியில் காற்று மாசு வந்துவிட்டதா? நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் டெல்லி காற்று மாசு குறைந்து விடுமா? அப்படி குறையுமாயின் நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்தி விடுகிறேன் என செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.